சனி, 3 மார்ச், 2018

இந்தியா எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை?

நாட்டின் பல மாநிலங்களில் ஜாதிய அரசியலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதை போல வடகிழக்கில் இன ரீதியான அரசியலை கையிலெடுத்திருக்கிறது பாஜக. 

பாஜகவின் தேர்தல் வியூகம் என்பது பெரும்பான்மை ஜாதி வாக்குகளை குறிவைப்பது; 
அவர்களை இந்து என்ற போர்வையில் ஒருமுகப்படுத்துவது. இதற்காக எத்தகைய வியூகத்தையும் செய்வது என்பதுதான். 


இடஒதுக்கீடு கொடு அல்லது ஒழித்துக் கட்டு என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்படுவதன் பின்னணியும் இதுதான். 
ஆனால் குஜராத்தில் இந்த வியூகம் நெகட்டிவாகப் போனது.

பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த பட்டேல் ஜாதியினர் காங்கிரஸுடன் கை கோர்க்க மரண பயத்தை எதிர்கொண்டது தேர்தலில். 
கேரளாவிலும் கூட சிபிஎம்-ன் வாக்கு வங்கியான ஈழவா சமூகத்தை தம் வசமாக்க முயற்சித்து தோல்வியைத்தான் பெற்றது.

கர்நாடகாவில் பாஜகவின் வாக்கு வங்கியாக இருக்கும் லிங்காயத்து ஜாதியினர் இப்போது தனி மத அடையாளம் கோரி கிளர்ச்சியில் இறங்கிவிட்டனர். 
இதனை காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. இதனால் இன்னொரு பெரும்பான்மை ஜாதியான ஒக்கலிகர்களுடன் கை கோர்க்க பாஜக தயாராகிவிட்டது.

இதேபோல தமிழகத்திலும் ஜாதிகளை முன்வைத்து அறுவடை செய்ய துடிக்கிறது பாஜக. 
ஆனால் திராவிட கட்சிகளைத் தாண்டி காலூன்ற முடியாத நிலையில் இருக்கிறது பாஜக

வடகிழக்கு மாநிலங்களின் நிலைமை வேறானது. 
அனைத்து வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான இனக்குழுக்கள் உள்ளன. இந்த இனக்குழுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோரிக்கையை முன்வைத்து போராடுகின்றன. 
தனிநாடு கோருகிற இயக்கங்கள், தனி மாநிலம் கோருகிற இயக்கங்கள், தன்னாட்சி கோருகிற இயக்கங்கள் என ஒவ்வொரு மாநிலத்திலும் இனக்குழுக்கள் ஏராளமான உள்ளன. 
இந்த இனக்குழுக்களின் கோரிக்கைகளை பிரதான கட்சிகளான காங்கிரஸும், இடதுசாரிகளும் கண்டுகொள்ளவில்லை. 


மாறாக இந்த இனக்குழுக்களின் போராட்டங்களை ஒடுக்கின. 
இதனால் பிரதான கட்சிகள் மீதான பெரும் கோபம் இனக்குழுக்களுக்கு இருந்து வந்தது. உதாரணமாக பார்த்தால் திரிபுராவில் தனி நாடு கோரிய இயக்கம்தான் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி. தேர்தலுக்கு சற்று முன்னர் பழங்குடி மக்களுக்கு என தனி மாநிலம் கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை பாஜக மவுனமாக வேடிக்கை பார்த்தது. 
அதாவது இடதுசாரி அரசுக்கு எதிரான வாக்குகளை ஒருமுகப்படுத்தியது.

இதேபோல்தான் இனக்குழுக்களின் கூட்டணியை உருவாக்கியது; 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபக்கம்.. 
இன்னொரு பக்கம் வடகிழக்கு இனக்குழுக்களை உள்ளடக்கிய கூட்டணி; 
காங்கிரஸ்- இடதுசாரிகள் இல்லாத கட்சிகளை தம் வசமாக்கியே வைத்திருந்தது. 
அத்தனைவிதமான சமரசங்கள், விட்டுக் கொடுப்புகளுக்கும் பாஜக தயாராகவும் இருந்தது. தேசியவாதம் பேசுகிற பிரிவினைவாதம் பேசுகிற கட்சிகளை அரவணைத்துக் கொள்வதில் கொஞ்சமும் வெட்கப்படவில்லை. 

தமிழகம் போன்ற மாநிலங்களில் மாநில சுயாட்சி பேசினாலே பிரிவினைவாதி என முத்திரை குத்தும் பாஜக கூச்சமே இல்லாமல் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத குழுக்களுடன் கை குலுக்கியது. இத்தகைய வெட்கமற்ற சமரசனங்களால்தான் பாஜக வெல்ல முடிந்திருக்கிறது. 

பாராளுமன்றத் தேர்தலில் இந்தியர் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ15 லட்சம் டெபாசிட் செய்வோம் என அதிரடியாக அள்ளிவிட்டு வாக்குகளை அறுவடை செய்தது பாஜக. 
இதேபாணியில் திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ரூ15,000 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என உறுதி மொழி கொடுத்து ஏமாற்றியுள்ளது.


தத்துவார்த்த அரசியலை நம்பாமல் பச்சை சந்தர்ப்பவாதத்தை மட்டுமே பாஜக நம்பி வடகிழக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

எந்தவகையிலும் வெற்றிப்பெறுவது என்பது மட்டும்தான் பாஜகவின் குறிக்கோள்.அதற்காக தேர்தல் ஆணையம்,அதிகார வர்க்கம்,கார்பரேட்கள்,பணபலம் ஊடகங்கள் அனைத்தையும் கையில் வைத்துள்ளது.
மறுமுறை வெற்றிப்பெறப்போவதில்லை என்பது பாஜக-ஆர்.எஸ்.எஸ்.கூட்டணி உணர்ந்துதான் உள்ளது.
அதனால் இந்த ஆட்சிக்காலத்திலேயே இந்தியாவை காவியாக்கி விடுவது.
இந்தியா எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதுதான் ஒரே நோக்கம்.

நன்றி: ஒன்னிந்தியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...